2 சிசுகளுக்கு எலும்பு முறிவு பீம்ஸ் டாக்டர்களின் குளறுபடி
2 சிசுகளுக்கு எலும்பு முறிவு பீம்ஸ் டாக்டர்களின் குளறுபடி
ADDED : ஜன 23, 2025 05:03 AM
பீதர்: பீம்ஸ் மருத்துவனை டாக்டர்களின் அலட்சியத்தால், பிரசவத்தின்போது, இரண்டு சிசுக்களின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பீதரின் சில்லர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 22. கர்ப்பிணியாக இருந்த இவர், டிசம்பர் 28ம் தேதி பிரசவத்துக்காக, அரசு சார்ந்த பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப்பிரசவம் நடக்குமென, டாக்டர்கள் கூறினர். திடீரென சுகப்பிரசவம் நடப்பது கஷ்டமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்தனர். ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் நடந்து இரண்டு மணி நேரம் கடந்தும், குழந்தை கால்களை அசைக்க முடியாமல் இருந்தது. இதை கண்ட குழந்தையின் குடும்பத்தினர் டாக்டரிடம் கூறினர். டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, குழந்தையின் வலது காலின் தொடை எலும்பு முறிந்திருப்பது தெரிந்தது.
எலும்பு முறிந்துள்ளது குறித்து, டாக்டர்களிடம் கேள்வி எழுப்பியபோது, 'அறுவை சிகிச்சை செய்தபோது எலும்பு முறிந்திருக்கும். இது சகஜம்தான்' என, அலட்சியமாக கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. தங்களுக்கு நியாயம் வேண்டுமென, குடும்பத்தினர் சுகாதாரத்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பீதரின் மங்கல்பேட் கிராமத்தில் வசிக்கும் நாகேந்திரா மடிவாளா, தன் மனைவி ரூபா ராணியை பிரசவத்துக்காக, டிசம்பர் 14ம் தேதி, பீம்ஸ் மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், குளறுபடி செய்ததில் இந்த குழந்தையின் கால் எலும்பும் முறிந்துள்ளது.
இரண்டு பெண்களுக்கும், மூத்த டாக்டர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், பயிற்சி டாக்டர்களும், நர்ஸ்களும் பிரசவம் பார்த்ததே சம்பவத்துக்கு காரணம். பச்சிளம் குழந்தைகளின் கால்கள் முறிந்துள்ளதால், குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என, பெற்றோர் கலங்குகின்றனர்.

