ADDED : ஆக 23, 2026 07:12 PM
மும்பை: மஹாராஷ்டிராவில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக எடுத்து வரப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை, எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, 10 நாள் வரை விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக மும்பை, புனே உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பந்தல்கள் அமைத்து, பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த ஆண்டு வரும் செப்., 14ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, பிரமாண்ட சிலைகளை பந்தல்களுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் பணிகள் மும்பையில் நடக்கின்றன.
மும்பையின் புலேஷ்வரில் ஆண்டுதோறும் நிறுவப்படும் புலேஷ்வராச்சா ராஜா விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு, புலேஷ்வருக்கு நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஜெய் அம்பே சவுக் என்ற பகுதிக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த சிலை திடீரென பக்தர்கள் மீது சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
