கூகி மக்களுடன் செல்பி எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்: கலவரத்தில் 2 பேர் பலி
கூகி மக்களுடன் செல்பி எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்: கலவரத்தில் 2 பேர் பலி
UPDATED : பிப் 16, 2024 01:00 PM
ADDED : பிப் 16, 2024 11:38 AM

இம்பால்: மணிப்பூரில் கூகி இனத்தை சேர்ந்த சிலருடன் போலீஸ்காரர் ஒருவர் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை பணியில் சேர்க்க கோரி கூகி மக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் இருவர் பலியாகினர், 25 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் கூகி இன மக்களுக்கும், மெய்டி இன மக்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் கலவரத்தால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கூகி மக்கள் அதிகம் வாழும் சுரசந்த்பூர் மாவட்டத்தில் ஷியாம்லால் பால் என்ற போலீஸ்காரர் ஒருவர், கூகி இனத்தை சேர்ந்த சிலருடன் சேர்ந்து மலை உச்சியில் நின்று செல்பி எடுத்துள்ளார்.
அதில் இடம்பெற்ற நபர்கள் கையில் ஆயுதம் வைத்திருந்தனர். அவர்கள் கிராம பாதுகாவலர்கள் என சொல்லப்படுகிறது. இந்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலானது. உடனே ஷியாம்லால் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் எனக் கோரி நேற்று மாலையில் சுரசந்த்பூரில் கலவரம் ஏற்பட்டது.
400க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் எஸ்.பி., அலுவலகத்தை சூழ்ந்து கொண்டு ஷியாம்லாலை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கோரினர். அவர்கள் அங்கு நின்ற பஸ் ஒன்றுக்கும் தீவைத்தனர். அலுவலகத்தின் மீது கல் வீசித்தாக்கினர். இதனால் கலவரக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்; 25 பேர் காயம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.