குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்ட 2 சிவிங்கிபுலிகள் வனப்பகுதியில் விடுவிப்பு
குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்ட 2 சிவிங்கிபுலிகள் வனப்பகுதியில் விடுவிப்பு
UPDATED : மே 11, 2026 10:48 PM
ADDED : மே 11, 2026 09:43 PM

ஷியோபூர்: போட்ஸ்வானாவில் இருந்து கொண்டு வரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இரு சிவிங்கிபுலிகள், வனப்பகுதியில் (மே 11) விடுவிக்கப்பட்டன.
நம் நாட்டில், 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோனதாக கூறப்படும் சிவிங்கிபுலிகளை மீண்டும் வளர்க்கும் வகையில், 'சிவிங்கிபுலி மறுவாழ்வு திட்டம்', 2022ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக தென்னாப்ரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து 20 சிவிங்கிபுலிகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த பிப்ரவரியில், தென்னாப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து மூன்று பெண், ஆறு ஆண் என ஒன்பது சிவிங்கிபுலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசத்தின் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அவை பராமரிக்கப்பட்டு வந்தன. பிற விலங்குகளிடம் இருந்து பிரித்து தனியாக அவை பராமரிக்கப்பட்டு வந்தன.
இதில், இரண்டு புலிகள் குனோ ஆற்றின் கரையை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று விடுவிக்கப்பட்டன. தேசிய பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் 'சி.சி.வி., 2 மற்றும் சி.சி.வி., 3' ஆகிய இரு சிவிங்கிபுலிகளை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வனப்பகுதியில் விடுவித்தார்.
அப்போது பேசிய அவர், “பூங்காவில் பராமரிக்கப்பட்ட இரு சிவிங்கிபுலிகள் வனப்பகுதியில் விடப்படுவது சிவிங்கிபுலி திட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன் வாயிலாக, மத்திய பிரதேசம் சிவிங்கிபுலி மாநிலமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இது, இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் மற்றொரு முக்கிய மைல்கல்,” என்றார்.
