ADDED : ஆக 03, 2025 08:19 PM

புதுடில்லி:பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்தர் சிங் லவ்லி, யமுனா மேம்பாட்டு வாரியத் தலைவராகவும், ராஜ்குமார் சவுகான் டில்லி கிராம மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. அதை முன்னிட்டு, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் இரு வாரியங்களுக்கும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து, மங்கோல்புரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான, ராஜ்குமார் சவுகான், “இந்தப் பொறுப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
“என் மீது முதல்வர் ரேகா குப்தா காட்டிய நம்பிக்கையை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்,” என்றார்.
முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசில், ராஜ்குமார் சவுகான் அமைச்சர் பதவி வகித்தார்.
கடந்த, 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில், வடமேற்கு டில்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அதை காங்கிரஸ் மறுத்ததால் பா.ஜ.,வுக்கு தாவினார்.
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் டில்லி மாநில தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி, 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு மாறினார்.
பிப்ரவரியில் நடந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அரவிந்தர் சிங் லவ்லி, ஆம் ஆத்மி வேட்பாளர் நவீன் சவுத்ரியை தோற்கடித்தார்.

