ஒரு வாழைப்பழத்துக்கு 2 குரங்குகள் சண்டை: பீஹாரில் ரயில் சேவை பாதிப்பு
ஒரு வாழைப்பழத்துக்கு 2 குரங்குகள் சண்டை: பீஹாரில் ரயில் சேவை பாதிப்பு
ADDED : டிச 08, 2024 08:56 PM

புதுடில்லி: பீஹார் ரயில் நிலையத்தில் ஒரு வாழைப்பழத்துக்கு இரண்டு குரங்குகள் சண்டையிட்டதால், ரயில் சேவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
பீஹாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் 4க்கு அருகே இரண்டு குரங்குகள் வாழைப்பழத்துக்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது குரங்குகளில் ஒன்று, கையில் கிடைத்த ரப்பர் போன்ற பொருளை மற்றொரு குரங்கு மீது வீசியது.
அது, மேல்நிலை மின் கம்பியில் பட்டு, கம்பி அறுந்து போனது; கம்பி ரயிலின் போகி மீது விழுந்ததால், ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில் நிலைய ஊழியர்கள், மின் கம்பிகளை அகற்றி, இணைப்பை சரி செய்தனர்.
இந்த பிரச்னையால், ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பீஹார் சம்பர்க் கிராந்தி ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்றது. மற்ற ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. குரங்குகள் சண்டையால் ரயில் நிலைய சேவைகள் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டன.
அந்த குரங்குகள் செய்த சேட்டையால் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவற்றை பிடித்தனர்.