பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 2 பேர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 2 பேர் கைது
ADDED : டிச 13, 2025 09:57 AM

இட்டாநகர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் 11ம் தேதி இட்டாநகர் போலீசாரிடம் இருந்து வந்த தகவலையடுத்து, மேற்கு சியாங் மாவட்டத்தின் ஆலோவைச் சேர்ந்த ஹிலால் அகமது,26, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த நவம்பர் 25ம் தேதி பாப்பும் பாரே மாவட்டத்திலிருந்து ஆலோவிற்கு வந்த ஹிலால், பழைய மார்க்கெட்டில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியில் போர்வைகளை விற்று வந்துள்ளார். இவர், முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களிடம் பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதேபோல, சாங்லாங் மாவட்டத்தின் மியோவோவிலும் உளவு பார்த்தக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த நபர் குறித்த தகவலை பகிர போலீசார் மறுத்தனர்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது மாலிக் மற்றும் சபீர் அகமது மீர் ஆகியோர் இட்டாநகர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும், டெலிகிராம் மூலம் ராணுவம் மற்றும் ராணுவ முகாம்கள் குறித்த விவரங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதற்கும், ஆயுதங்களை கடத்துவதற்கும் சபீர் உதவியதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

