17வது லோக்சபா கூட்டத்தொடரில் லீவே எடுக்காத 2 எம்.பி.,க்கள்
17வது லோக்சபா கூட்டத்தொடரில் லீவே எடுக்காத 2 எம்.பி.,க்கள்
ADDED : பிப் 13, 2024 10:13 PM

புதுடில்லி, பார்லிமென்டின் 17வது லோக்சபா கூட்டத் தொடரில், பா.ஜ., உறுப்பினர்கள் மோகன் மாண்டவி, பாகிரத் சவுத்ரி ஆகியோர் ஒரு நாள் கூட லீவே எடுக்காமல் வருகை தந்துள்ளனர்.
பி.ஆர்.எஸ்., எனப்படும், பார்லிமென்ட் ஆய்வு சேவைகள் நிறுவனம் அளித்துள்ள தரவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
பார்லிமென்டின் 17வது லோக்சபாவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 274 நாள் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இதில், சத்தீஸ்கரின் கன்கேர் தொகுதியின் பழங்குடி இனத்தை சேர்ந்த பா.ஜ., உறுப்பினர் மோகன் மாண்டவி, ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதி எம்.பி., பாகிரத் சவுத்ரி ஆகியோர், 100 சதவீதம் வருகை தந்துள்ளனர்.
முதல் முறை எம்.பி.,க்களான இருவருமே ஒரு நாள் கூட்டத்தை கூட தவறவிடாமல் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் லோக்சபாவில் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., புஷ்பேந்திர சிங், 17வது லோக்சபாவில் அதிகபட்சமாக 1,194 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, அந்தமான் -- நிக்கோபார் தீவுகளின் எம்.பி., குல்தீப் ராய் சர்மா, 833 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, உ.பி.,யின் பிஜ்னார் தொகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் எம்.பி., மலுாக் நாகர், 582 விவாதங்களிலும், தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் 307 விவாதங்களிலும் பங்கேற்றுள்ளனர்.
லோக்சபாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு விவாதத்தில் கூட பங்கேற்காத ஒன்பது எம்.பி.,க்களில், பா.ஜ., உறுப்பினர்களான பாலிவுட் நடிகர்கள் சன்னி தியோல், திரிணமுல் காங்கிரசின் சத்ருஹன் சின்ஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.