ADDED : நவ 22, 2024 07:16 AM
ஹெசரகட்டாபுரா: போதைப்பொருள் விற்று வந்த, நைஜீரியர்கள் இருவரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கல்வி, தொழில், சிகிச்சை என, பல காரணங்களுக்காக பெங்களூருக்கு வரும் நைஜீரிய பிரஜைகள், விசா முடிந்தும் சொந்த நாட்டுக்கு செல்வது இல்லை. சட்டவிரோதமாக இங்கேயே வசிக்கின்றனர். போதைப்பொருள் விற்பதில் ஈடுபடுகின்றனர். போலீசாரும் ஆங்காங்கே சோதனை நடத்தி, கைது செய்கின்றனர். கிலோ கணக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
பெங்களூரு வடக்கு தாலுகாவின், ஹெசரகட்டாபுராவில் ஒரு வீட்டில் நைஜீரிய பிரஜைகள் போதைப்பொருள் விற்பதாக, தகவல் கிடைத்தது. சி.சி.பி., போலீசார், நேற்று அதிகாலை அங்கு சென்று சோதனை நடத்தி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நைஜீரிய பிரஜைகள் டேவிட், 35, கோபி, 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கல்வி விசாவில், இந்தியாவுக்கு வந்தனர். அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், போதைப்பொருள் விற்றதை ஒப்புக்கொண்டனர்.