திருட்டு வழக்கில் சிக்கியோர் 2 கொலை செய்தது அம்பலம்
திருட்டு வழக்கில் சிக்கியோர் 2 கொலை செய்தது அம்பலம்
ADDED : மார் 09, 2024 01:12 AM

மூணாறு:கேரளா, இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே காஞ்சியாறு காக்காட்டுகடையை சேர்ந்த விஷ்ணு, 27, ராஜேஷ், 31, ஆகியோர் மார்ச் 3ல் அதிகாலை கட்டப்பனையில் உள்ள வேலாயுதன் என்பவர் ஒர்க் ஷாப்பில் திருடினர்.
அப்போது அங்கு வந்த வேலாயுதன் மகன் பிரவீன், அவரது நண்பர் தாம்சன் ஆகியோர் பார்த்து கூச்சலிட, விஷ்ணு இரும்பு கம்பியால் பிரவீனை தாக்கி தப்பிய போது, கீழே விழுந்து கால் முறிந்தது. கட்டப்பனை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கோட்டயம் மருத்துவமனையில் விஷ்ணு சிகிச்சை பெறுகிறார். ராஜேஷ் சிறையில் உள்ளார். விசாரணையில், விஷ்ணுவின் தந்தை விஜயன், சகோதரியின் பிஞ்சு குழந்தை ஆகியோரை விஷ்ணுவும், ராஜேஷும் சேர்ந்து கொலை செய்து புதைத்தது தெரிந்தது.
காஞ்சியாறு காக்காட்டுகடை பகுதியில் ராஜேஷ் வசித்த வாடகை வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, அங்கு மாந்திரீக பூஜைகள் நடந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. நரபலி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ராஜேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

