ADDED : செப் 05, 2025 12:35 AM
ராஞ்சி: ஜார்க்கண்டில் வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், போலீசார் இருவர் வீர மரணம் அடைந்தனர்.
ஜார்க்கண்டின் பலமு மாவட்டத்தில் உள்ள கேடல் கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அவர்களை, வனப்பகுதியில் பதுங்கியிருந்த தடை செய்யப்பட்ட சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பான, டி.எஸ்.பி.சி., எனப்படும், திரிதிய சம்மேளன் பிரஸ்துதி நக்சல் குழு தளபதி சசிகாந்த் தலைமையிலான குழுவினர் துப்பாக்கியால் சுட்டனர்.
போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் மூன்று போலீசார் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் சந்தன் மேத்தா, சுனில் ராம் ஆகிய இருவர் வீரமரணம் அடைந்தனர். மற்றொரு போலீஸ்காரருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
இதையடுத்து, தலைமறைவான நக்சல்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.