கிராம காவலர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்
கிராம காவலர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்
ADDED : நவ 08, 2024 06:58 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கிராமப் பாதுகாவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஒமர் அப்துல்லா இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதும், கொல்வதும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொள்ளாத, வெளிமாநில மக்களை தொடர்ந்து கொன்று குவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் பாதுகாவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி, சுட்டுக்கொன்றுள்ளனர். முன்ஷ்லா தார் வனப்பகுதியில் வைத்து நஷிர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோரை கடத்திய பயங்கரவாதிகள், அவர்களை சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றுள்ளனர். இது தொடர்பான போட்டோக்களை எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, கிராமப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துணைநிலை கவர்னர் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.