ADDED : ஜன 07, 2025 03:00 AM

திருப்பதி:   திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பெண் பக்தர்கள் பலியாகினர்; மூன்று பேர் காயமடைந்தனர்.
ஆந்திராவின் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டத்தின் ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிலர், புங்கனுாரில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
சித்துார் மாவட்டத்தின் நரசிங்காபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் மீது அவ்வழியாக திருப்பதி நோக்கி நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பெத்த ரெட்டம்மா, 40, லஷ்மம்மா, 45, ஆகியோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த மற்ற மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துஉள்ளது.

