ADDED : ஜூன் 15, 2025 09:21 PM
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு பகுதிகளில், இரு பெண்கள் துாக்கில் தொங்கினர்.
உ.பி.,யின் அப்துல்பூர் என்ற கிராமத்தில், தன் வீட்டில் குடியா என்ற 27 வயது பெண் துாக்கில் தொங்கிய படி இறந்து கிடந்தார். அந்த பெண்ணின் கணவர் சோகன்வீர், மாமனார் பல்ராம், மாமியார் மாயா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
அந்த பெண்ணின் சகோதரர் ஜிதேந்தர், போலீசில் அளித்த புகாரில், 'என் சகோதரி குடியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவளின் உடலை தொங்க விட்டுள்ளனர்' என கூறியுள்ளார்.
குடியாவுக்கும், சோகன்வீருக்கும் நான்காண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இருவருக்கும், இரு குழந்தைகள் உள்ளனர். இந்த வழக்கு குறித்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
அதுபோல, தல்டா என்ற கிராமத்தில் உர்ஷி என்ற 36 வயது பெண், தன் வீட்டில் துாக்கில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, அந்த பெண்ணின் கணவர் சுதிர் உள்ளிட்ட நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உர்ஷி - சுதிர் தம்பதிக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இருவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பிரச்னை காரணமாக, அந்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.