குஜராத்தில் சாக்கடையில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு
குஜராத்தில் சாக்கடையில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு
ADDED : பிப் 07, 2025 12:18 AM

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 வயது சிறுவன், 24 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வாரியாவ் பகுதியை சேர்ந்த பெண் வைஷாலி வேகத்.
இவரது மகன் கேதர் வேகத், 2. நேற்று முன்தினம் மாலை குழந்தை கேதரை அழைத்துகொண்டு, வைஷாலி ஐஸ் கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
அப்போது சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் சிறுவன் கேதர் தவறி விழுந்தான்.
இதனால் அதிர்ச்சிஅடைந்த தாய் அளித்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சாக்கடை கால்வாயில் ஆக்சிஜன் செலுத்தியும், கேமராவை பயன்படுத்தியும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சாக்கடை கலக்கும் நீரோடையிலும் படகு உதவியுடன் சிறுவனை தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், 24 மணி நேரம் ஆன நிலையில் சிறுவன் விழுந்த இடத்தில் இருந்து 400 மீ., தொலைவில் உள்ள பாதாள சாக்கடை கலக்கும் இடத்தில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் சிறுவன் சடலம் கிடந்தது, நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்புப்படையினர் மீட்டனர்.

