20 மணி நேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை மீட்பு
20 மணி நேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை மீட்பு
UPDATED : ஏப் 04, 2024 04:04 PM
ADDED : ஏப் 04, 2024 04:00 PM

விஜயபுரா: கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை பக்கவாட்டு குழி அமைத்து உயிருடன் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
விஜயபுரா, இன்டியின், லச்யானா கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் முஜகொன்டா, 30. இவரது மனைவி பூஜா, 26. தம்பதிக்கு சாத்விக், 2, என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். மழை இல்லாததால், பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
எனவே சதீஷின் தந்தை சங்கரப்பா, நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, அதை மூடாமல் விட்டுவிட்டார்.இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணியளவில், குழந்தை சாத்விக் நிலத்தில் விளையாடும் போது, தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர், குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த ஆழ்துளை கிணற்றின் பக்கத்தில், ஜெ.சி.பி., இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை பக்கவாட்டு குழி அமைத்து உயிருடன் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்பு படையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

