ADDED : ஏப் 03, 2025 07:05 AM
பல்நாடு : ஆந்திராவில், பறவைக் காய்ச்சலுக்கு, 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு, கடந்த மாத துவக்கத்தில், கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, மங்களகிரியில் உள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், பெண் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர்.
கடந்த 15ல், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. பறவைக் காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்திருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகித்தனர்.
குழந்தையின் ரத்த மாதிரியை, மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
முடிவில், உயிரிழந்த பெண் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.
பல்நாடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், 2 வயது பெண் குழந்தை அந்த காய்ச்சலால் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.