ADDED : பிப் 01, 2024 06:49 AM
யாத்கிர்: பயனாளிகளிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி உட்பட, மூவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
யாத்கிரின், திந்தனி கிராமத்தில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றுபவர் ராஜசேகர் நாயக். ஹுனசிஹொளே கிராமத்தை சேர்ந்த மரிலிங்கப்பா, 'இந்திரா ஆவாஸ்' திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். இதற்கான நிதியுதவியை வழங்கும்படி, சில மாதங்களுக்கு முன், கிராம வளர்ச்சி அதிகாரி ராஜசேகரிடம் கோரினார்.
நிதி வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார். இது தொடர்பாக, லோக் ஆயுக்தாவில் மரிலிங்கப்பா புகார் அளித்தார். இதையடுத்து நடவடிக்கை எடுத்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ராஜசேகரை கையும், களவுமாக பிடித்தனர்.
இவருக்கு உதவியாக இருந்த பில் கலெக்டர்கள் பீமண்ணா, ராகப்பாவையும் கைது செய்தனர்.
விசாரணை முடிந்த பின், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் மூவரின் குற்றம் உறுதியானதால், இவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.