தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது ஆயுதங்கள் பறிமுதல்
தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : மே 18, 2025 03:32 AM
ஹைதராபாத் : தெலுங்கானாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 20 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான நக்சல்கள் பதுங்கியிருந்ததை அடுத்து, இரு மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த ஏப். 21ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நடந்த மெகா தேடுதல் வேட்டையில் 16 பெண்கள் உட்பட 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
எஞ்சிய நக்சல்கள், தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தின் காரேகுட்டா பகுதியில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முளுகு மாவட்டம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நடந்த தீவிர சோதனையில், 20 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.