''கையில் காசு இல்லை; எங்களால் எதுவுமே செய்ய முடியல'': காங்கிரஸ் தலைவர்கள் புலம்பல்
''கையில் காசு இல்லை; எங்களால் எதுவுமே செய்ய முடியல'': காங்கிரஸ் தலைவர்கள் புலம்பல்
UPDATED : மார் 21, 2024 05:05 PM
ADDED : மார் 21, 2024 05:04 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், 'கையிருப்பில் பணமில்லாததால், எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை' என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால், ரூ.210 கோடி அபராதமும் விதித்த வருமான வரித்துறை, இதற்காக, காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளை முடக்கியது. இது தொடர்பாக இன்று (மார்ச் 21) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி.,க்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
கார்கே:
மத்திய பா.ஜ., அரசு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்றுள்ளது. லோக்சபா தேர்தல் நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது. அவற்றை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.
எந்தெந்த நிறுவனங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றார்கள் என்பதை பா.ஜ., பகிரங்கமாக வெளியிட வேண்டும். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் எதிர்க்கட்சியான காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சோனியா:

இருப்பினும், சவாலான சூழ்நிலையிலும், எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை திறம்பட தக்கவைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஒருபுறம், தேர்தல் பத்திர விவகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ராகுல்:

ஏற்கனவே தேர்தலில் போட்டியிடுவது பாதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் ஒரு மாதத்தை இழந்துவிட்டோம். எங்கள் கட்சி மீது நடத்தப்பட்ட கிரிமினல் தாக்குதல். இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற கருத்தியல் இப்போது பொய்யாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எங்களுக்கு 20 சதவீத ஓட்டுகள் உள்ளன. எங்களால் தேர்தல் செலவுக்கு 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தல் செலவுக்கு பணமில்லாததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

