டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
ADDED : அக் 05, 2025 11:43 PM

டார்ஜிலிங்: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகினர்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
இந்நிலையில், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு துவங்கி விடியவிடிய அதிகனமழை கொட்டியது. 12 மணி நேரத்தில், 30 செ.மீ., மழை பதிவானதால், மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கடைகள், வாகனங்கள், மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
புதைந்தன
தொடர் மழையால், டார்ஜிலிங்கில் மிரிக் - சுகியோபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதையில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
சேறும், சகதியும் நிறைந்துள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த வீடுகளும், கடைகளும் மண்ணில் புதைந்தன. சர்சாலி, மிரிக் பஸ்தி, ஜாஸ்பிர்கான், தர் காவ்ன், நாக்ரகாட்டா பகுதி களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இதில், மிரிக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில், 11 பேர் பலியாகினர்; 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நாக்ரகட்டாவின் தர் காவ்னில், ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இடிபாடுகளில் சிக்கிய 40 பேர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்களை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. டார்ஜிலிங்கில் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பாலாேசான் இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்தனர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துர்கா பூஜை கொண்டாட்டத்தை தொடர்ந்து, சுற்றுலா சென்ற பலர் அங்கேயே சிக்கியுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சுற்றுலா பயணியரை மீட்கும் நடவடிக்கையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் சேவை பாதிப்பு
அதேபோல், மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜல்பைகுரி, சிலிகுரி, டார்ஜிலிங்கில் மினி ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில், கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, டார்ஜிலிங், கலிம்பாங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அரசு வேலை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பார்வையிட உள்ளார்.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில், 'மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பேரழிவு துரதிர்ஷ்டவசமானது. நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
'தலைமைச் செயலர் உட்பட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என, தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், முதல்வர் மம்தா உறுதியளித்துள்ளார்.