வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரி: மத்திய அரசுக்கு அஜித் பவார் வலியுறுத்தல்
வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரி: மத்திய அரசுக்கு அஜித் பவார் வலியுறுத்தல்
ADDED : டிச 19, 2024 04:13 PM

நாசிக்: வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும் என்று மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வலியுறுத்தினார்.
நாக்பூரில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள், 20 சதவீத ஏற்றுமதி வரி செலுத்தும் நிலையில், அந்த வரியை நீக்கி, அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மாநில துணை முதல்வர் அஜித்பவார்,மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலுக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வெங்காயம் அதிக அளவில் விளையும் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்னைகள் ஏராளம். இங்கு விளையும் வெங்காயம், நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் வெங்காயத்திற்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. இதனால், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெங்காயம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எதுவும் கிடைக்காததால், இப்போது துயரத்தில் உள்ளனர்.
வெங்காயம் குவிண்டால் ஒன்றுக்கு சராசரியாக 2,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பருவமழை மற்றும் மாறிவரும் காலநிலை ஏற்கனவே வெங்காய விவசாயிகளின் வருவாயில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உற்பத்தி செலவை விட குறைவான விலையை பெற வைத்தால் வெங்காய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
எனவே 20 சதவீதம் ஏற்றுமதி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

