போலீஸ் பணியில் அக்னி வீரர்களுக்கு உ.பி.,யில் 20 சதவீத இட ஒதுக்கீடு
போலீஸ் பணியில் அக்னி வீரர்களுக்கு உ.பி.,யில் 20 சதவீத இட ஒதுக்கீடு
ADDED : ஜூன் 04, 2025 02:19 AM

லக்னோ : 'உத்தர பிரதேச போலீஸ் துறையில் இணைந்து பணியாற்ற அக்னி வீரர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்' என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நம் நாட்டின் முப்படைகளில் சேர, இளைஞர்களுக்கு 'அக்னிபத்' என்ற திட்டத்தை மத்திய அரசு, 2022ல் அறிமுகப்படுத்தியது.
உத்தரவு
இதில், 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள், உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் நான்கு ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ் அக்னிவீரர்களாக பணியில் சேர்க்கப்படுவர்.
அவ்வாறு தேர்வு செய்யப்படுவோருக்கு ஆறு மாதங்களுக்கு பயிற்சிகள் வழங்கி, பாதுகாப்பு பணிகளில் மூன்றரை ஆண்டுகள் ஈடுபடுத்தப்படுவர்.
அதன்பின், விருப்பம் உள்ளவர்கள் அப்பணியில் தொடரவும் மத்திய அரசு வாய்ப்பு அளிக்கிறது.
ஒப்பந்தத்தின்படி வெளியேறும் அக்னி வீரர்களுக்கு, மாநில அரசுகள் சார்பில் பணி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, அக்னிவீரர்களாக செயல்பட்டவர்களுக்கு ஹரியானா, ஒடிஷா போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு பணிகளில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த வரிசையில், தற்போது உத்தர பிரதேச பா.ஜ., அரசும், மாநில போலீஸ் துறையில் அக்னிவீரர்கள் பணியாற்ற, 20 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து உ.பி., நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொதுப்பிரிவு, பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.
வாய்ப்பு
''இதில் ஏதேனும் பிரிவைச் சேர்ந்த அக்னி வீரர், அதன் கீழ் உள்ள இடஒதுக்கீட்டின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்படும்.
''இதன் வாயிலாக, தேசத்தை காக்கும் அவர்களின் பணி தொடர வாய்ப்பு அளிக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.