ADDED : டிச 27, 2024 05:36 AM

தாவணகெரே: வன விலங்குகளை வேட்டையாட வந்த நால்வர், வனத்துறையினரை பார்த்து தப்பியோடினர். இவர்கள் விட்டு சென்ற, 21 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
தாவணகெரே, நாமதியின், பலவனஹள்ளி கிராமத்தின் ஹரமகட்டா வனப்பகுதியில், வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக, தகவல் வந்தது. எனவே, வனத்துறையினர் தினமும் ரோந்து சுற்றி கண்காணிக்கின்றனர்.
அதேபோன்று, நேற்று அதிகாலையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பைக்குகளில் நால்வர் சென்றனர். வனத்துறையினரை பார்த்த அவர்கள், தப்பி செல்ல முற்பட்டனர். அவர்களை பிடிக்க முற்பட்ட போது, பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பி விட்டனர்.
வனத்துறையினர் பைக்கில் சோதனை நடத்திய போது, 21 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. பைக்குகளையும், வெடி குண்டுகளையும் வனத்துறையினர் கைப்பற்றினர். இவைகள் வன விலங்குகளை வேட்டையாட கொண்டு வந்திருக்கலாம் என, கருதப்படுகிறது.
தப்பியோடிய நால்வரில், இருவர் அடையாளம் தெரிந்தது. நாமதியின் திம்மப்பா, குட்டப்பா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற இருவர், இவர்களின் கூட்டாளிகளாக இருக்கலாம்.
நான்கு பேரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி, நாமதி போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் புகார் செய்துள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.