மடாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மஹாராஷ்டிராவில் 21 போலீசார் காயம்
மடாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மஹாராஷ்டிராவில் 21 போலீசார் காயம்
ADDED : அக் 05, 2024 11:59 PM

அமராவதி: மஹாராஷ்டிராவில், யதி நரசிங்கானந்த் மஹாராஜ் என்ற மடாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவத்தில், 21 போலீசார் காயமடைந்தனர்; 1,200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த யதி நரசிங்கானந்த் மஹாராஜ் என்ற மடாதிபதி, தசரா உருவ பொம்மை எரிப்பது தொடர்பாக சமீபத்தில் பேசியபோது சில கருத்துகளை தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துகள், தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி அமராவதியில் உள்ள நாக்பூரிகேட் போலீஸ் ஸ்டேஷனை ஏராளமான முஸ்லிம்கள் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
வழக்குப் பதிவு செய்தது தொடர்பான விபரங்களை போலீசார் அளித்ததை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.
அடுத்த சில மணி நேரத்தில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, பதற்றமான சூழல் நிலவியது. 1,000க்கும் மேற்பட்டோர் இருந்த கும்பல் நாக்பூரிகேட் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முன்தினம் நள்ளிரவில் முற்றுகையிட்டடது.
இது குறித்து, போலீசார் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே கும்பலில் இருந்த சிலர், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர்.
போலீஸ் நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது.
இதில், அதிகாரிகள் உட்பட 21 போலீசார் படுகாயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய கும்பலை அவர்கள் விரட்டியடித்தனர்.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து விசாரணை நடத்திய போலீசார், 1,200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே உ.பி., மாநிலம் காஜியாபாதில் நரசிங்கானந்த் மஹாராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.