வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக 22 இடங்களில் ரெய்டு
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக 22 இடங்களில் ரெய்டு
UPDATED : அக் 06, 2024 06:30 AM
ADDED : அக் 06, 2024 05:10 AM

மும்பை: ஜெய்ஷ் - -இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக, டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், 22 இடங்களில், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு, ஜெய்ஷ் --- இ - முகமது. கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், இந்த அமைப்பினர் நடத்திய பயங்கர தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள் 46 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரில், 1989க்குப் பின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது. புல்வாமா தாக்குதலுக்கு தாங்களே காரணம் என, இந்த அமைப்பும் பொறுப்பேற்றது.
விசாரணை
இந்நிலையில், இம்மாதம் 2ம் தேதி, இந்த அமைப்பின் பெயரில், ராஜஸ்தானில் உள்ள எட்டு ரயில் நிலையங்களுக்கு கடிதம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதில், ராஜஸ்தானின் கங்காநகர் உட்பட எட்டு ரயில் நிலையங்களில், அக்டோபர் 30ல் குண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரத்தில், இந்த அமைப்பின் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்கை, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், அசாம் மற்றும் டில்லியில், 22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனை
மஹாராஷ்டிராவில் என்.ஐ.ஏ., அதிகாரிகளுடன் இணைந்து, அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினரும், பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆறு பேர் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேபோல, சோதனை நடந்த மற்ற பகுதிகளிலும், பலர் கைதாகி உள்ளனர்.
அனைவரிடமும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தனரா, பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாகவே நேற்றைய சோதனை நடந்துள்ளது.