5 ஆண்டில் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன: எஸ்.பி.ஐ தகவல்
5 ஆண்டில் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன: எஸ்.பி.ஐ தகவல்
ADDED : மார் 13, 2024 01:31 PM

புதுடில்லி: நாடு முழுவதும் 2019 ஏப்.,1 முதல் 2024 பிப்.,15ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனி நபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்;
இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். இந்த திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்கள், பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என, கடந்த மாதம், 15ம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும் எனவும், அந்த விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று (மார்ச் 12) தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., அளித்தது. இது தொடர்பாக எஸ்.பி.ஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அளித்த தகவல்களின்படி, 'நாடு முழுவதும் 2019 ஏப்.,1 முதல் 2024 பிப்.,15ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு கோடி ரூபாய் 13,109 தேர்தல் பத்திரங்களும் அடங்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
