UPDATED : ஜூலை 31, 2024 08:14 PM
ADDED : ஜூலை 31, 2024 12:38 AM

வயநாடு : கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, 250 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. மாநிலத்தின் மிகவும் கொடூரமான இயற்கை சீற்றமாகக் கருதப்படும் இந்த நிலச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ள 225 பேரை தேடும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டியுள்ளது, கேரளத்தின் வயநாடு மாவட்டம். இங்கு, மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன.
வெள்ளம்
இந்த பகுதிகளில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்தது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. மழை எச்சரிக்கையால் முகாம்களில் தங்க வைத்திருந்த மக்கள், மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மலையில் இருந்து மரங்களையும், பாறைகளையும் அடித்து வந்தது வெள்ளம். விடுதிகளிலும் வீடுகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், வெள்ளத்தில் மிதந்து வந்தன.
வெள்ளத்தின் விளைவாக நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது; ஆற்றின் கரைகள் உடைந்தன. சரிந்த மண்ணையும் இழுத்துக் கொண்டு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. உறங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணில் புதைந்தனர். சுவரிலும், பாறையிலும் மோதி சிதைந்த உடல்கள், மலப்புரம் சாலியாறு நோக்கி அடித்துச் செல்லப்பட்டன.
சூரல்மலை பகுதியில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், முண்டக்கை பகுதிக்கு யாரும் செல்ல முடியாத நிலை உருவானது. அங்கு வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறி ஆனது. அவர்களை மீட்க என்ன செய்யலாம் என அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், சூரல்மலையிலும் காலை 4:00 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், இருவழிஞ்ஞி ஆறு இரண்டாகப் பிரிந்து, அந்த பகுதியை சூழ்ந்து கொண்டது. இதில் அந்த கிராமத்தினர் அடித்துச் செல்லப்பட்டனர். முண்டக்கையிலும், சூரல்மலையிலுமாக மூன்று இடங்களில் செங்குத்தான நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சாலியாறு வழியாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சடலங்கள், சூரல்மலையில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ள போத்துகல் பகுதியில் கரை ஒதுங்கின.
புதையுண்டன
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்த 100 வீடுகள் என்ன ஆயிற்று என்றே தெரியாத அளவுக்கு, மண்ணில் புதையுண்டன. கரையோரம் இருந்த மேலும் 500 வீடுகள், இருந்த சுவடே காணாமல் போயின. பள்ளிகள், வழிபாட்டு தலங்களையும் காணவில்லை. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, முப்படைகளும் மீட்புப் பணியில் இறங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த, 43 பேர் அடங்கிய குழு உடனடியாக அனுப்பப்பட்டது. மற்ற இடங்களில் இருந்து 200 வீரர்கள் அனுப்பப்பட்டனர். கடற்படையின் நீச்சல் வீரர்களும் விரைந்தனர். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டன. மோசமான நிலச்சரிவு என்பதால், எங்கு பார்த்தாலும், சேறும் சகதியுமாக இருந்தது. வெள்ளம் வடியவும் நேரம் பிடித்தது. இதனால், மீட்புப் படையினரால் சம்பவ இடங்களை உடனடியாக அடைய முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்; இன்று மதியம வரை, 224 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 225 பேரை காணவில்லை. 3,000 பேருக்கு மேல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விடிய விடிய மீட்பு பணி தொடர்ந்தது.
கேரளாவின் மிகப் பெரும் இயற்கை பேரழிவு இது என முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், விஜயனிடம் பேசினர். மத்திய அரசு தரப்பில் எல்லா உதவிகளும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். பார்லி.,யிலும் வயநாடு சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அமைச்சர்களுடன் பேசினார். வயநாடு தொகுதியின் முன்னாள் உறுப்பினரான ராகுல், அங்குள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு, லோக்சபாவில் அரசை கேட்டுக் கொண்டார்.
ராஜ்யசபாவில் சபை அலுவல்களை ஒத்தி வைத்து இந்த பேரிடர் குறித்து பேச வேண்டும் என, கேரளா எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். அவர்கள் பேச அனுமதிக்கும்படி, எதிர்க்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார். அதையடுத்து, எம்.பி.,க்கள் பேசுவதற்கு, சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி அளித்தார்.

