ADDED : ஜன 25, 2024 07:03 AM

பெங்களூரு : ''டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கர்நாடகாவுக்கு 23,000 கோடி ரூபாய் முதலீடு வரும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, கனரக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில், நெஸ்லே, எச்.பி., எச்.சி.எல்., வோல்வோ, ஐகியா, சோனி, மைக்ரோசாப்ட், ஹிடாச்சி உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் எனது தலைமையில், 50க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இதன் பலனாக, பெங்களூரில் 100 மெகாவாட் திறன் கொண்ட பிரமாண்டமான டேட்டா மையம் அமைக்க வெப் ஒர்க்ஸ் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துஉள்ளது.
இதன் மூலம், 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
விஜயபுராவில், 300 கோடி ரூபாயில் லுலு குரூப், பி.எல்., ஆக்ரோ நிறுவனங்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
இதுபோன்று, பெங்களூரு, விஜயபுரா, பெலகாவி, ஹுப்பள்ளி தார்வாட் உட்பட வெவ்வேறு பகுதிகளில், 23 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.