பல்லாரி அரசு மருத்துவமனையில் 9 மாதங்களில் 23 பெண்கள் பலி!: பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்த பரிதாபம்
பல்லாரி அரசு மருத்துவமனையில் 9 மாதங்களில் 23 பெண்கள் பலி!: பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்த பரிதாபம்
ADDED : டிச 26, 2024 06:42 AM

பல்லாரி: பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதங்களில், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்களில், 23 பேர் இறந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மாவட்ட கலெக்டர் பிரசாந்த் குமார் மிஸ்ரா தகவல்
பல்லாரி மாவட்டத்தில் மொக்கா, சிறுகுப்பா, சண்டூர், குருகோடு போன்ற பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், அப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர், பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வருவதையே வழக்கமாக வைத்து உள்ளனர்.
பதற்றம்
மாவட்ட அரசு மருத்துவமனையில் பெரும்பாலும் பிரசவம், தீக்காயம், விபத்துகளில் பாதிக்கப்பட்டோரே சிகிச்சைக்கு வருவர்.
கடந்த சில மாதங்களாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சில பெண்கள், குழந்தைகள் பிறந்ததும் உயிரிழந்தனர். இச்செய்தி, கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், சில அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணியர் உயிரிழந்தனர்.
இதனால், பல்லாரி அரசு மருத்துவமனை மீது அனைவரின் கவனமும் திரும்பியது. கர்ப்பிணியர் இறந்ததற்கு ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற நோய்கள் தான் காரணம் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
இறந்த பெண்களின் குடும்பத்தினர் போராட்டம் செய்வதும் தொடர் கதையானது.
பிரசவத்துக்கு வருவோரில் பெரும்பாலானோருக்கு, 'சிசேரியன்' எனும் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் நெருக்கடியால் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரமற்ற குளுக்கோஸ் செலுத்தப்பட்டதே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், குளுக்கோஸ் வினியோகித்த மருந்து நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மருந்து கட்டுப்பாட்டாளர் டாக்டர் உமேஷை, 'சஸ்பெண்ட்' செய்யவும் உத்தரவிடப்பட்டது.
உத்தரவு
பல்லாரி மருத்துவமனை, விம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் படி, கர்நாடகா உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா உத்தரவிட்டார். குழந்தை பிரசவித்த பெண்கள், அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான திறன் மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் கனகவள்ளி தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.
பிரச்னை நாளுக்கு நாள் விஸ்வரூபமாவதை உணர்ந்த முதல்வர் சித்தராமையா, இறந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.
சில நாட்களுக்கு முன், மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, பல்லாரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.
அசுத்தமாக இருந்த மருத்துவமனையை பார்த்து அதிர்ந்து போனார். தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள் போன்றவை அசுத்தமாக இருப்பதை சுட்டி காட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தார். மேலும், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் போதாது; இறந்த பெண்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்.
சட்டசபை
இதற்கிடையில், இவ்விஷயம், பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலித்தது.
இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த தயார் என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அறிவித்தார்.
6,000 பிரசவங்கள்
இந்நிலையில், இச்சம்பவம் பற்றி பல்லாரி மாவட்ட கலெக்டர், பிரசாந்த் குமார் மிஸ்ரா நேற்று கூறியதாவது:
பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், உயரிய மருத்துவ வசதிகள் இருக்கின்றன.
இதனால் பிற மாவட்டங்களில் இருந்து, அவசர கேஸ்களாக கர்ப்பிணியர் சிகிச்சைக்கு வருகின்றனர். பிரசவம் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது. பிரசவத்தின் போது, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்பட்டு சிலர் இறந்தனர்.
இதற்கு காரணம், கர்ப்பமாக இருக்கும் போது, சத்தான உணவுகள் சாப்பிடாமல் இருப்பதே. இதனாலே சிசேரியன் செய்யும் போது பெரும்பாலானோர் இறக்கின்றனர்.
மேலும் குழந்தை திருமணங்கள் செய்த பெண்களுக்கு பிரசவத்தின் போது, சில உறுப்புகள் செயல்படாமல் போகும் அபாயமும் ஏற்படுகிறது.
இங்கு யாருக்கும் கட்டாயமாக சிசேரியன் செய்யப்படுவதில்லை. மருத்துவமனையில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு 6,000 பிரசவங்கள் நடந்துள்ளன.
அதில் 70 சதவீதம் சிசேரியன் மூலம் நடத்தப்பட்டன. இதில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில், ஏப்ரல் முதல் தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 23 பேர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தொடர் உயிரிழப்புகளின் காரணத்தை அறிவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே மாவட்ட மருத்துவமனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதனால், நவ., 12 முதல் 20 வரை குறைந்த எண்ணிகையிலேயே பிரசவ சிகிச்சைக்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பிரசவ சிகிச்சைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.