ADDED : ஜன 29, 2024 11:00 PM

பெங்களூரு: நல்ல முறையில் உள்ள ரவீந்திர கலாஷேத்திராவை 24 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த, கன்னடம், கலாச்சாரத்துறை முன் வந்திருப்பதற்கு, எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரின் ரவீந்திர கலாஷேத்ரா, 1963ல் திறந்துவைக்கப்பட்டது. நாடகம், யக்ஷகானா, சங்கீதம், நடனம் உட்பட இலக்கியம், கலாசார நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு அளிக்கப்படுகிறது.
கன்னடம், கலாசாரத்துறை ஒருங்கிணைப்பில், பொதுப்பணித்துறை 2018ம் ஆண்டில் 2.24 கோடி ரூபாய் செலவில், ரவீந்திர கலாஷேத்ராவை நவீனப்படுத்தியது. புதிதாக இருக்கைகள், ஒலிபெருக்கி, மின் விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டன. 2022ல் அரங்கத்தின் வாடகை அதிகரிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஐந்து சதவீதம் வாடகையை அதிகரிக்கும்படி, கன்னட, கலாசாரத்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது ஒரு முறை நிகழ்ச்சிகள் நடத்த, 5,000 ரூபாய் டிபாசிட், ஜி.எஸ்.டி., உட்பட 12,434 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. டிபாசிட் பணம் திரும்ப கிடைக்கும்.
இந்நிலையில், 24 கோடி ரூபாய் செலவில், ரவீந்திர கலாஷேத்ராவை நவீனப்படுத்த, கன்னடம், கலாசாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நல்ல நிலையில் உள்ள அரங்கத்தை, மீண்டும் நவீனப்படுத்தினால், வாடகை கட்டணம் மேலும் அதிகரிக்கும். கலைஞர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது.
நாடகங்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்த பொருளாதார சுமை ஏற்படும். 24 கோடி ரூபாய் செலவில், ரவீந்திர கலாஷேத்ராவை நவீனப்படுத்துவதற்கு பதிலாக, பெங்களூரிலேயே மற்றொரு மினி அரங்கம் கட்டலாம்.
மிச்சமாகும் பணத்தில் மாவட்ட நாடக அரங்கங்களுக்கு, தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் உதவியாக இருக்கும் என, பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.