கர்நாடகாவில் 24 எதிரி சொத்துகள் கண்டுபிடிப்பு பெங்களூரு நகர கலெக்டர் தகவல்
கர்நாடகாவில் 24 எதிரி சொத்துகள் கண்டுபிடிப்பு பெங்களூரு நகர கலெக்டர் தகவல்
ADDED : ஜன 29, 2024 07:16 AM
பெங்களூரு: பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்ட, 'எதிரிகளின் சொத்து' களை ஏலம் விட, கர்நாடக அரசு தயாராகி வருகிறது.
இது குறித்து, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்தா கூறியதாவது:
கர்நாடகாவில் சொத்துகளை வாங்கிய பின், பாகிஸ்தான், சீனா குடியுரிமை பெற்று அங்கு வசிக்கின்றனர். அவர்கள் சொத்துகளை இங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
இத்தகைய சொத்துகளை, 'எதிரிகளின் சொத்துகள்' என, சி.இ.பி.ஐ., எனும் 'கஸ்டோடியன் ஆப் எனிமி பிராபர்ட்டி பார் இந்தியா' அறிவித்துள்ளது.
சி.இ.பி.ஐ.,யின் மும்பை மண்டல பிரதிநிதிகள், பெங்களூரு வந்திருந்தனர். 'எதிரிகளின் சொத்து' களை ஆய்வு செய்தனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில், 24 சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஒருவேளை சொத்துகளை நீண்ட கால ஒப்பந்தத்துக்கு பெற, மாநில அரசு முன்வராவிட்டால், சொத்துகளை ஏலம் விட, சி.இ.பி.ஐ., முடிவு செய்துள்ளது.
பெங்களூரு நகர், கலபுரகி, விஜயபுரா, உடுப்பி மாவட்டங்களில், எதிரிகள் சொத்துகள் உள்ளன. இவற்றை தனியார் நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.
பெட்ரோல் பங்க், ஹோட்டல் உட்பட, பல நோக்கங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
பெங்களூரில் எதிரிகள் சொத்து என, அடையாளம் காணப்பட்ட ஆறு சொத்துகள் உள்ளன. 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள நிலம், 500 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும்.
ராஜ்பவன் சாலை, விட்டல் மல்லையா சாலை, விக்டோரியா சாலைகளில் இந்த சொத்துகள் உள்ளன. நான்கு நபர்கள் இவற்றின் உரிமையாளர்களாக உள்ளனர். மூவர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். ஒருவர் சீனா குடியுரிமை பெற்றுள்ளார்.
மத்திய உள்துறை, புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.. மாவட்ட கலெக்டர்களுக்கு, 'எதிரி சொத்து'களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.