தனியார் வங்கிகளில் பணி விலகல் 25% அதிகம்; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
தனியார் வங்கிகளில் பணி விலகல் 25% அதிகம்; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
ADDED : டிச 30, 2024 08:55 AM

புதுடில்லி: 'தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வங்கி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: பரவலாக தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு பிரச்னைகள் காரணமாக, பணி விலகுவது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இழப்பு ஏற்படுவதுடன் ஆட்சேர்ப்பு செலவுகளையும் வங்கிகளுக்கு அதிகரிக்கிறது. வாடிக்கையாளர் சேவைகளில் இடையூறு ஏற்படவும் இது வழிவகுக்கிறது. பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது, மனித வளச் செயல்முறை மட்டுமல்ல நிறுவனத்தின் வளர்சிக்கு உதவும் இலக்குகளுக்கும் தேவையானதாகும்.
வங்கி செயல்பாடுகளில் அபாயங்களை ஏற்படுத்துகிறது. நகைகளுக்கு கடன் வழங்குதல், டாப்-அப் கடன்கள் உட்பட அனைத்திலும் ரிசர்வ் வங்கி நடை முறைகளை பின்பற்ற வேண்டும். முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.