UPDATED : பிப் 23, 2024 12:13 PM
ADDED : பிப் 22, 2024 12:02 AM

சென்னை: தமிழகத்தில், 25 லட்சம் வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து, பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த முனைப்பு காட்டுகிறது.
நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளுக்கு, 'பி.எம்.சூரிய கர் - முப்த் பிஜ்லி யோஜனா' எனப்படும், சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, ஜனவரியில் பிரதமர் மோடி அறிவித்தார். அத்திட்டத்தின் கீழ், வீட்டு கூரையில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அந்த மின் நிலையத்தால் குடும்பத்துக்கு, மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்; உபரி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கலாம்.
இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கிலோவாட் திறனில் மின் நிலையம் அமைக்க 30,000 ரூபாய், 2 கிலோவாட்டிற்கு 60,000 ரூபாய், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் 78,000 ரூபாய்,
மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த தொகை, சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் பணி முடிந்த 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும்.
தமிழகத்தில் மின் வாரியம் 2.40 கோடி வீடுகளுக்கு மின் வினியோகம் செய்கிறது. பிரதமர் மின் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் குறைந்தது 1,000 வீதம், தமிழகம் முழுதும் 25 லட்சம் வீடுகளில், கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்து, பொறியாளர்களுக்கு மின் வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகள் மற்றும் கட்டடங்களின் மேற்கூரை, மொட்டை மாடிகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சாத்தியக்கூறு ஒப்புதல் பெற வேண்டும். 3 கிலோ வாட் வரை அமைக்க சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து சமீபத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க பொறியாளர்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.
1 கிலோவாட்டால் ரூ.919 மிச்சமாகும்!
ஒரு கிலோவாட் திறன் உடைய சூரியசக்தி மின் நிலையத்தில் இருந்து, தினமும், 4 - 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். தமிழகத்தில் ஒரு வீட்டில், இரு மாதங்களுக்கு, 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், மின் வாரியத்திற்கு 1,125 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அந்த வீட்டில், 1 கிலோவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால், இரு மாதங்களுக்கு, 240 யூனிட்கள் உற்பத்தியாவதாக வைத்துக் கொள்வோம். எனவே, 400 யூனிட் மின் பயன்பாட்டில், சூரியசக்தி மின்சாரத்தின் பங்கு 240 யூனிட். இதனால், மீதி 160 யூனிட்டில், முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் வருகிறது. அதுபோக மீதி 60 யூனிட்டிற்கான மின் கட்டணம், 135 ரூபாய். அதனுடன், 'நெட்வொர்க் சார்ஜ்' 71 ரூபாய் சேர்த்தால், 206 ரூபாய் தான் மின் கட்டணம் வரும். இதனால், 400 யூனிட்டிற்கு, 1,125 ரூபாய்க்கு பதில், 206 ரூபாய் செலுத்துவதால், 919 ரூபாய் மின் கட்டணச் செலவு மிச்சமாகும். இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும் அதற்கு ஏற்ப மின் கட்டணச் செலவு குறையும்.