உத்தரகண்ட் பத்ரிநாத்தில் பனிச்சரிவில் புதைந்த 25 பேர்
உத்தரகண்ட் பத்ரிநாத்தில் பனிச்சரிவில் புதைந்த 25 பேர்
UPDATED : பிப் 28, 2025 10:56 PM
ADDED : பிப் 28, 2025 10:51 PM

டேராடூன் : உத்தரகண்டில், பத்ரிநாத் பகுதியில் உள்ள உயரமான எல்லை கிராமமான மானா அருகே, நேற்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில், பனியை அகற்றும் பணியில் ஈடுபட்ட 57 தொழிலாளர்கள் சிக்கினர். இதில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 25 பேரை பாதுகாப்பாக மீட்க, முழு வீச்சில் மீட்புப் பணி நடக்கிறது.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பகுதியில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் மானா என்ற கிராமம் உள்ளது.
இது, இந்தோ - திபெத் எல்லையில், கடல் மட்டத்திலிருந்து 10,499 அடி உயரத்தில் உள்ளது. இது, இந்திய எல்லையில் உள்ள கடைசி கிராமம்.
இந்நிலையில், திபெத் எல்லையை நோக்கி நம் ராணுவத்தினர் செல்லும் பாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில், நேற்று காலை வழக்கம் போல், பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பின் 57 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததுடன், பனிச்சரிவும் ஏற்பட்டது.
இதில், தொழிலாளர்கள் சிக்கினர். இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். பனிச்சரிவில் சிக்கிய 32 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 25 பேரை மீட்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
பனிச்சரிவு குறித்து, சமோலி கலெக்டர் சந்தீப் திவாரி கூறியதாவது:
மானா - மானா கணவாய் இடையே நேற்று காலை வழக்கம் போல் பி.ஆர்.ஓ., தொழிலாளர்கள் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில், தொழிலாளர்கள் சிக்கினர். மானா - பத்ரி நாத் இடையே உள்ள பி.ஆர்.ஓ., முகாமும் பனிச்சரிவில் சிக்கியது.
இதுவரை, 32 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். எஞ்சியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்தோ - திபெத் எல்லை படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வரை உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில், கடும் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக மீட்புப் பணி மெதுவாக நடக்கிறது. தொழிலாளர்களை உயிருடன் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ''பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசின் அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அனைவரையும் உயிருடன் மீட்பதே எங்கள் நோக்கம்,'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசிய பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மத்திய அரசு அனைத்து உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.