பெண்களுக்கென விரைவில் 25 பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்ட்
பெண்களுக்கென விரைவில் 25 பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்ட்
ADDED : அக் 12, 2024 07:09 AM
பெங்களூரு : ஆட்டோவில் பயணிக்கும் பெண் பயணியரிடம் அதிக கட்டணம் கேட்டு மிரட்டல் உட்பட பல சம்பவங்கள் நடப்பதால், பெண்களுக்கென நகரில் 25 பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்டை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், பெங்களூரில் ஆட்டோவில் ஏறிய சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம், அதிக கட்டணம் கேட்டு ஆட்டோ ஓட்டுனர் மிரட்டினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
இத்துடன், அழைக்கும் இடத்துக்கு வராமல் இருப்பது; அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது என பல சம்பவங்கள் நடந்தன.
இதைத் தடுக்கும் வகையில், பெண்களுக்காக நகரின் 25 இடங்களில் பிரீ பெய்டு ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, சில்க் போர்டு, மெஜஸ்டிக், கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா மெட்ரோ ரயில் நிலையம், மடிவாளா, யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், காந்தி பஜார் உட்பட 25 முக்கிய சந்திப்புகளில் பெண்களுக்கென பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்பட உள்ளன.
இந்த ஸ்டாண்டுகளை திறக்க போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோ ஸ்டாண்டுகளை பராமரிக்க விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளன.
தவிர, மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பயணியரிடம் கூடுதல் கட்டணம் கேட்க முடியாது. அரசு விதிப்படி,1 கி.மீ.,க்கு 15 ரூபாய்; 2 கி.மீ.,க்கு 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரீபெய்டு ஆட்டோ ஸ்டாண்டுகளில் பெண், ஆண் ஓட்டுனர்கள் இருப்பர். அவர்களின் முழு விபரமும், இந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும். எனவே, பெண்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம்.