18,000 போலி நிறுவனங்களால் ரூ.25,000 கோடி ஜி.எஸ்.டி., இழப்பு
18,000 போலி நிறுவனங்களால் ரூ.25,000 கோடி ஜி.எஸ்.டி., இழப்பு
ADDED : நவ 07, 2024 07:30 AM

புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் வாயிலாக 25,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.
நாடு முழுதும் போலி ஜி.எஸ்.டி., நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக, கடந்தாண்டு மே 16ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற்ற முதல் சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த 21,791 நிறுவனங்கள் வாயிலாக 24,010 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி., ஏய்ப்பு நடைபெற்றுள்ளதை கண்டறிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 2024 ஆக., 16ம் தேதி முதல் அக்., 30 வரை, இரண்டாவது சிறப்பு விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: நாடு தழுவிய இரண்டா வது சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட 73,000 நிறுவனங்களை ஆய்வு செய்தோம். இதில், கிட்டத்தட்ட 18,000 நிறுவனங்கள் போலியானவை என கண்டறிந்து உள்ளோம்.
இந்த நிறுவனங்கள் வாயிலாக 24,550 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளது. மேலும், சிறப்பு விசாரணையின் போது, 70 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., தொகையை, நிறுவனங்கள் தாமாக முன்வந்து செலுத்தி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.