ADDED : ஜன 07, 2024 08:13 PM

போபால்: ம.பி.,யில் கடந்த 25 நாளில் 25 ஆயிரம் இறைச்சி கடைகள் மூடப்பட்டு உள்ளதாக முதல்வர் மோகன்யாதவ் கூறி உள்ளார்.
ம.பியில் கடந்த ஆண்டு நவ.,-ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு டிசம்பரில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.இதில் பா.ஜ., அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக மோகன்யாதவ் பதவியேற்றார். பதவியேற்ற உடனே பொது இடங்களில் திறந்தவெளியில் இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் விழா ஒன்றில் 218 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 187 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகளில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கிடையாது. கடந்த 13-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிறப்பித்த முதல் உத்தரவில் பொது இடங்களில் திறந்தவெளியில் இறைச்சி விற்க கூடாது எனவும் மீறினால் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி கடந்த 25 நாளில் பொது இடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக 25 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு உள்ளது. வரும் மகரசங்கராந்தி பண்டிகை மகளிர்க்கு அதிகாரம் அளிக்கும் தினமாக கொண்டாடப்படும் என முதல்வர் மோகன்யாதவ் தெரிவித்தார்.