குஜராத் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஸ்சில் சிக்கிய தமிழக பக்தர்கள் 26 பேர் மீட்பு
குஜராத் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பஸ்சில் சிக்கிய தமிழக பக்தர்கள் 26 பேர் மீட்பு
ADDED : செப் 28, 2024 12:15 AM

பாவ்நகர்: குஜராத் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 26 பக்தர்கள் உட்பட 29 பேரை, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 10 பெண்கள் உட்பட 26 பேர் அடங்கிய குழுவினர், தனியார் ஏஜென்சி வாயிலாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆன்மிக தலங்களை காண, சென்னையில் இருந்து ரயிலில் கடந்த 19ம் தேதி ஜெய்ப்பூருக்கு சென்றனர்.
கனமழை
அங்கு, சொகுசு பஸ் வாயிலாக பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து, குஜராத் மாநிலத்திற்கு சென்றனர்.
அங்கு, பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள நிஷாக்லாங் மஹாதேவ் கோவிலில் நேற்று முன்தினம் வழிபட்டனர். அதன்பின், பஸ்சில் பாவ்நகரை நோக்கி திரும்பும்போது கனமழை கொட்டியது.
இந்நிலையில், கோலியாக் கிராமம் அருகே உள்ள ஆற்றை கடந்து செல்வதற்கு, பஸ்சின் டிரைவர் முயன்றார்.
எனினும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்வதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரித்தனர்.
அதை பொருட்படுத்தாமல் டிரைவர் பஸ்சை இயக்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், அந்த பஸ் சிக்கியது. இதனால், அந்த பஸ்சில் இருந்தவர்கள் பீதியில் கூச்சலிட்டனர்.
தகவலறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கித் தவித்த பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பஸ்சின் கண்ணாடியை உடைத்து ஒவ்வொருவராக கீழே இறக்கி, டிராக்டரில் ஏற்றினர்.
ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமானதால், அவர்களை மீட்கச் சென்ற சிறிய ரக டிராக்டரும் அதில் சிக்கியது.
இதைத்தொடர்ந்து, கனரக டிராக்டர் வரவழைக்கப்பட்டு, 26 பேர் உட்பட மொத்தம் 29 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து பாவ்நகர் கலெக்டர் மேத்தா கூறியதாவது:
பாவ்நகரில் கடந்த 24 மணி நேரத்தில், 9.5 செ.மீ., மழை பதிவானது. இதன் காரணமாக ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சை
அப்போது, ஆற்றை கடக்க முயன்ற இந்த பஸ் வெள்ளத்தில் சிக்கியது. பஸ்சில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் வாயிலாக மீட்க முதலில் திட்டமிட்டோம்.
ஆனால், இரவு நேரம் என்பதாலும், அப்பகுதியில் 11 கிலோ வாட் திறனுடன் உயர்மின்னழுத்த கம்பியும் செல்வதால் அத்திட்டத்தை கைவிட்டோம். பஸ்சில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால், அவர்களை டிராக்டர் வாயிலாக பத்திரமாக மீட்க எண்ணிணோம்.
எட்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அனைவரையும் மீட்டோம். அவர்களுக்கு உரிய மருத்துவ முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். விரைவில், தமிழகத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.