ஜார்க்கண்டில் 9 மாதத்தில் 256 நக்சல் கைது: 32 பேர் சுட்டுக்கொலை
ஜார்க்கண்டில் 9 மாதத்தில் 256 நக்சல் கைது: 32 பேர் சுட்டுக்கொலை
ADDED : அக் 14, 2025 07:35 PM

ராய்ப்பூர்: ஜார்க்கண்டில் கடந்த 9 மாதங்களில் 256 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 32 பேர் கைது செய்யப்பட்டதுடன், 36 பேர் சரண் அடைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நக்சலைட் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மபி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதில் ஏராளமான நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் போலீசிடம் சரணடைந்தனர். இதனால் அந்த அமைப்பினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக நக்சலைட் அமைப்பு தெரிவித்தது. ஆனால், இதனை நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைய வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ராஜ் கூறியதாவது: கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 32 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். விவேக் என்ற பிரயாக் மன்ஜி, அனுஜ் என்ற சகாதேவ் சோரன் உள்ளிட்ட முக்கிய நக்சலைட் தலைவர்களும் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தலைக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதே காலகட்டத்தில் 30 நக்சலைட்கள் சரணடைந்தனர். 266 பேர் கைது செய்யப்பட்டனர். நக்சல்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள், வெடிமருந்துகள், ஐஇடி வகை வெடிகுண்டுகள் மற்றும் சிம்கார்டுகள், ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்