ADDED : டிச 03, 2024 01:06 AM

கண்ணுார், கேரளாவில், கண்ணுார் மாவட்டத்தின் வளப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப். அரிசி வியாபாரியான இவர், தமிழகத்தின் மதுரையில் நடந்த தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்க குடும்பத்துடன், கடந்த மாதம் 19ம் தேதி சென்றார்.
அதன்பின் ஊருக்கு திரும்பிய அஷ்ரப், தன் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து, ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அஷ்ரப், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அஷ்ரப் வீட்டில் யாரும் இல்லாததை நன்கு அறிந்த நபர் ஒருவர், கடந்த மாதம் 20ம் தேதி உள்ளே நுழைந்து, 40 நிமிடங்களுக்குள் பணம், நகைகளை கொள்ளைஅடித்து சென்றதை கண்டறிந்தனர்.
அதே நபர், மறுநாளும் அந்த வீட்டிற்குள் நுழைந்ததை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியதில், அண்டை வீட்டில் வசித்த வெல்டிங் தொழிலாளியான லிஜீஷ், 45, என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக, முன்னுக்குபின் முரணாக லிஜீஷ் பதிலளித்ததால், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பதிவான கைரேகைகளும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான உருவமும் லிஜீஷுடன் பொருந்தியது. இதையடுத்து, அஷ்ரப் வீட்டில் கொள்ளையடித்ததை லிஜீஷ் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், லிஜீஷ் வீட்டின் படுக்கையறையில் ரகசிய அறை இருந்ததையும், அங்கு, 1.21 கோடி ரொக்கம், 267 சவரன் தங்க நகைகளை பதுக்கி வைத்திருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, லிஜீஷை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு கொள்ளை வழக்கிலும் அவரது கைரேகைகள் பொருந்துவதால் இதுதொடர்பாகவும் விசாரணையை தீவிரப்படுத்திஉள்ளனர்.
வேறு இடங்களில் திருடிய நகைகளையும் இங்கு அவர் பதுக்கி வைத்திருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
அஷ்ரப் வீட்டில் எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விபரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. கைதான லிஜீஷ், வளைகுடா நாட்டில் பணியாற்றி நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.