உ.பி.,யில் 2.89 கோடி பேர் எஸ்.ஐ.ஆர்., பட்டியலில் நீக்கம்
உ.பி.,யில் 2.89 கோடி பேர் எஸ்.ஐ.ஆர்., பட்டியலில் நீக்கம்
ADDED : ஜன 07, 2026 01:12 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், மொத்தம் ஐந்தில் 1 பங்கான 2.89 கோடி பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15.44 கோடியில் இருந்து 12.55 கோடியாக குறைந்துள்ளது.
இரட்டை பதிவு
நம் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில், துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன், கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 46.23 லட்சம் பேர் இறந்தவர்கள். வசிப்பிடத்தை மாற்றியவர்கள் 2.17 கோடி பேர்.
இதுதவிர இரட்டை பதிவுகள் கொண்ட, 25.47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் லக்னோவில் 12 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது, அந்த மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதமாகும். இதேபோல், குறைந்தபட்சமாக லலித்பூரில் 95,450 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 9.96 சதவீதமாகும்.
அவகாசம்
இப்பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள், உரிமை கோரவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் வரும் பிப்ரவரி 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் மார்ச் 6ம் தேதி வெளியிடப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

