டி20 கிரிக்கெட்டில் 297 ரன் குவிப்பு; சரித்திரம் படைத்த இந்திய அணி... துவம்சம் செய்த சஞ்சு, சூர்யா!!
டி20 கிரிக்கெட்டில் 297 ரன் குவிப்பு; சரித்திரம் படைத்த இந்திய அணி... துவம்சம் செய்த சஞ்சு, சூர்யா!!
ADDED : அக் 12, 2024 09:13 PM

ஐதராபாத்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்னை பதிவு செய்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். வங்கதேச அணியின் பந்துவீச்சை சஞ்சு சாம்சனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் துவம்சம் செய்தனர். பவுண்டரிக்கும், சிக்சருக்குமாக பறக்கவிட்டனர். ரிஷாத் ஹொசைன் வீசிய 10 ஓவரில் சஞ்சு சாம்சன் 5 சிக்சர்களை பறக்க விட்டார். 40 பந்துகளில் அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்து 111 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன் குவித்தார்.
தொடர்ந்து வந்த ரியான் பராக் 34 ரன்னும், ஹர்திக் பாண்டியா 47 ரன்னும் விளாசியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மங்கோலியாவுக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 314 ரன்கள் குவித்துள்ளது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் அணிகளை வைத்து பார்க்கும் போது, இந்திய அணி அடித்த 297 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு அடுத்தபடியாக, 278 ரன்களுடன் ஆப்கானிஸ்தான் அணியும் (அயர்லாந்துக்கு எதிராக), 267 ரன்களுடன் இங்கிலாந்தும் (வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக) உள்ளது.