84 கடிதங்களுக்கு விளக்கமில்லை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடுத்த தகவல்
84 கடிதங்களுக்கு விளக்கமில்லை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடுத்த தகவல்
UPDATED : அக் 04, 2011 02:11 AM
ADDED : அக் 02, 2011 11:43 PM

புதுடில்லி : ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக விளக்கம் கேட்டு, கடந்த 2006ல் இருந்து, தற்போது வரை, முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் தற்போதைய எம்.பி.,க்களால், பிரதமர் அலுவலகத்துக்கு 84 கடிதங்கள் எழுதப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கறிஞர் விவேக் கர்க் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2006ம் ஆண்டு முதல், தற்போது வரை, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமங்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட தொலைத் தொடர்புத் துறை விஷயங்களுக்கு விளக்கம் கேட்டும், ஆலோசனை கூறியும், முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் தற்போதைய எம்.பி.,க்களால், பிரதமர் அலுவலகத்துக்கு 84 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. கடந்த 2008 மற்றும் 2010ல், தலா 21 கடிதங்களும், 2007ல் 18 கடிதங்களும், 2009ல் 9 கடிதங்களும், 2006ல் இரண்டு கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரியில் இருந்து, ஏப்ரல் வரை 13 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
சுரேந்திர கோயல் (காங்.,), ராஜிவ் சந்திரசேகர் (சுயேச்சை), முரளிமனோகர் ஜோஷி (பா.ஜ.,), அமர்சிங் (சமாஜ்வாடியில் இருந்து நீக்கப்பட்டவர்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), அஸ்வனி குமார் (காங்.,) ஆகியோர், கடிதம் எழுதியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.கடந்த 2007ல், முரளிமனோகர் ஜோஷி எழுதிய கடிதத்தில், 'நவீன தொழில்நுட்ப வசதிகளை, தொலைத் தொடர்புத் துறை கையாளும்போது, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை கருத்தில் கொண்டு, எச்சரிக்கையாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என, நான் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை' என, தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகம் காட்டப்படுவதாகவும், அதில் அவர் தெரிவித்துள்ளார்.சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங் எழுதியுள்ள கடிதத்தில், பழைய ஜி.எஸ்.எம்., ஆபரேட்டர்கள், கூடுதல் ஸ்பெக்ட்ரம்களை, அதற்கான கட்டணத்தை கொடுக்காமல் பயன்
படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ., எம்.பி., ஜெய்பிரகாஷ் நாராயண் சிங் எழுதிய கடிதத்தில்,'ஸ்பெக்ட்ரம், எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும், கூடுதல் ஸ்பெக்ட்ரம்களுக்கு ஏன், கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதையும், துவக்கத்தில் இருந்தே விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

