2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
UPDATED : ஜூன் 17, 2026 10:23 PM
ADDED : ஜூன் 17, 2026 09:59 PM

லக்னோ: ஆப்கானுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 170 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்தது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் முகமது சலீம் பந்தில், நங்கெயலியா கரோடேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன் பிறகு ரோகித் சர்மா, சுப்மன் கில் சேர்ந்து ரன் சேர்த்தனர். இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரோகித் சர்மா 48 ரன்னில் ரஷீத் கான் பந்து வீச்சில் போல்டானார்.இதன் பிறகு கேப்டன் சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ரன் குவித்தனர். சுப்மன் கில் 77 பந்தில் சதம் அடித்தார். இஷான் கிஷன் 71 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
ஆனால், நங்கெயலியா கரோடே போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது பந்துவீச்சில் சுப்மன் கில் (154), இஷான் கிஷன்(125), ஸ்ரேயாஸ் ஐயர் (26), கேஎல் ராகுல்(0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 19, குர்னூர் பிரார் 3, அர்ஷ்தீப் சிங் 3 , பிரின்ஸ் யாதவ் 4ரன்னில் அவுட்டானார்கள். இந்திய அணி 49.5 ஓவரில் 402 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.ஆப்கன் அணியின் நங்கெயலியா கரோடே 4, ரஷீத் கான் 3 விக்கெட் வீழ்த்தினர்.
403 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. குர்பாஸ் (41), ஜத்ரான் (21), செதிக் (42), ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்தனர். ரஹமத் ஷா மட்டும் அரைசதம் அடித்தார்.
ரஹ்மத் ஷா 79 ரன்னுக்கு அவுட் ஆனார், பிறகு வந்த வீரர்கள் தர்விஷ் ரசூலி(6), ஹஸ்மதுல்லா ஷாகிதி(4), நங்கெயலியா கரோடே (6) ரஷீத் கான் (12), கஜன்பர்(1), முகமது சலீம்(9) அவுட்டானார்கள்.ஆப்கன் அணி 44.3 ஓவரில் 232 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க இந்திய அணி 170 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டையும், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
ரோகித் சாதனை
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14,000 ரன்னைக் கடந்து 5வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.356 போட்டிகளில் பங்கேற்று 37 சதங்களுடன் மொத்தம் 14,038 ரன்களைக் குவித்துள்ளார். டெண்டுல்கர் (21999)கோலி (16447), கங்குலி (15622), டிராவிட் (15217) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
அதிவேக '1,000'
சமீப காலமாக நல்ல பார்மில் இருந்து வரும் இஷான் கிஷான், இன்றைய ஆட்டத்தில் 125 ரன் விளாசினார். இதன்மூலம், குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கில் (19), கோலி, ஷிகார் தவான் (25), 3வது இடத்தில் சித்து, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர்.
5வது வீரர்
அதுமட்டுமில்லாமல், குறைந்த பந்துகளில் 1000 ரன் விளாசிய வீரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளார். 966 பந்தில் 1,000 ரன் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், இப்பெருமையைப் பெற்றுள்ளார். இப்பட்டியலில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (857 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார்.
'7000' ரன்
கேப்டன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன் விளாசிய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
