ADDED : மார் 12, 2024 03:22 AM
மைசூரு: மைசூரு - சென்னை இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு, பெங்களூரு மார்க்கமாக, மைசூருக்கு மதியம் வரும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் ஏற்கனவே இயக்கப்படுகிறது.
பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மைசூரில் இருந்து காலையில் ஒரு ரயில் இயக்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண்: 20663 மைசூரில் இருந்து, காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு, நண்பகல் 12:25 மணிக்கு சென்றடையும். இடையில், மாண்டியாவில் 6:28 மணி; பெங்களூரு சிட்டியில் 7:45 மணி; கிருஷ்ணராஜபுரத்தில் 8:04 மணி; காட்பாடியில் 10:33 மணி அளவில் நிற்கும்.
மறு மார்க்கத்தில், ரயில் எண்: 20664 சென்னை சென்ட்ரலில் இருந்து, மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, மைசூருக்கு இரவு 11:20 மணிக்கு வந்தடையும். இடையில், காட்பாடியில் 6:23 மணி; கிருஷ்ணராஜபுரத்தில் 8:48 மணி; பெங்களூரு சிட்டியில் 9:25 மணி; மாண்டியாவில் 10:38 மணி அளவில் நிற்கும்.
மைசூரில் பராமரிப்பு வசதிகள் செய்யும் வரை, வரும் 14ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி எஸ்.எம்.வி.டி., பெங்களூரு முதல் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும்.
எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12:25 மணிக்கு சென்றடையும். இடையில், கிருஷ்ணராஜபுரத்தில் 8:04 மணிக்கும்; காட்பாடியில் 10:33 மணிக்கும் நிற்கும்.
மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து, மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:30 மணி அளவில் எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும். இடையில், காட்பாடியில் மாலை 6:23 மணி; கிருஷ்ணராஜபுரத்தில் 8:48 மணி அளவில் நிற்கும்.
பராமரிப்பு பணிகள் முடிந்த பின், ஏப்ரல் 5ம் தேதி முதல் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். கட்டணம் உட்பட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த ரயில் சேவையை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கி வைக்கிறார்.
இந்த சிறப்பு ரயில், இன்று காலை 9:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, காட்பாடியில் 10:48 மணி; கிருஷ்ணராஜபுரத்தில் 1:50 மணி அளவில் நின்று, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு மதியம் 2:20 மணிக்கு வந்தடைகிறது. சிறப்பு ரயிலில், எட்டு பெட்டிகள் உள்ளன.
