நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!சர்வதேச மருத்துவ இதழ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!சர்வதேச மருத்துவ இதழ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
UPDATED : செப் 08, 2026 09:35 PM
ADDED : செப் 08, 2026 09:12 PM

புதுடில்லி:புகைப்பிடிப்போர் வெளியேற்றும் சிகரெட் புகையை சுவாசித்த காரணத்தால், நோய் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2023ல் 3.25 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக, சர்வதேச மருத்துவ இதழான, 'லான்செட்' ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கடந்த, 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்.
புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறும்போது, அதன் தீமைகள் குறித்த எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெறுகின்றன.
மேலும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கும் தடை உள்ளன. புகைப்பவர்களுக்கு என்ன உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறதோ, அதைவிட அதிக பாதிப்பு அவர்கள் வெளியிடும் புகையை அருகில் இருந்து சுவாசிக்கும் நபர்களுக்கும் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் இதை, 'பாசிவ் ஸ்மோக்கிங்' என, வகைப்படுத்துகின்றனர்.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, 'குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் - 2023' ஆய்வுக் குழுவைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் 204 நாடுகளின் தகவல்களை திரட்டி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023ல் உலகம் முழுதும் 270 கோடி பேர், புகைப்பிடிப்போர் வெளியிடும் புகையை சுவாசிக்கும் சூழலில் இருந்துள்ளனர். அவர்களில் பாதி பேர் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ளனர். இதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் 76.7 கோடி பேர்.
சீனாவில் 66.4 கோடி பேரும், இந்தியாவில் 44.4 கோடி பேரும், இந்தோனேஷியாவில் 14.2 கோடி பேரும் பிறர் வெளியிடும் புகையை பல்வேறு கட்டங்களில் சுவாசித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 1990ல் 37.5 கோடி பேர் பிறர் புகைப்பதை சுவாசிக்கும் நிலையில் இருந்தனர். இது 2023ல் 44.4 கோடியாக அதிகரித்துள்ளது. பிறர் புகைத்ததை நீண்ட காலத்திற்கு சுவாசித்ததன் காரணமாக நோய் பாதிப்புக்கு ஆளாகி இறந்தோர் எண்ணிக்கை, 1990ல் நம் நாட்டில் 2.17 லட்சமாக இருந்தது. இது 2023ல் 3.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து டில்லியைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் டாக்டர் நீது ஜெயின் கூறியதாவது:
இந்தியாவில் பிறர் புகைப்பதை சுவாசிப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நுரையீரல் பாதிப்புடன் மட்டும் நின்றுவிடாது. நீண்ட கால அடிப்படையில் உடலின் பல்வேறு உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, மற்றவர்கள் புகைக்கும் புகையை சுவாசிப்பதால் இதய தமனி நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மோசமான விளைவுகள் உண்டாகலாம். குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி நிலையில் இருக்கும். அவர்கள் பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்தால் பாதிப்பு அதிகம் இருக்கும். எனவே நாடு முழுதும் புகைப்பிடிப்பதை குறைப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
