அசாமில் 3 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் பா.ஜ.,வில் ஐக்கியம்
அசாமில் 3 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 06, 2026 02:30 AM

குவஹாத்தி: அசாமில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட ஐந்து பேர் பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.
வட கிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 126 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில், அசாம் காங்., முன்னாள் தலைவர் பூபன் போரா, ஆளும் பா.ஜ.,வில் சமீபத்தில் இணைந்தார்.
இது, காங்.,கிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், மேலும் அக்கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.,க்களான கமலக்யா தே புரகாயஸ்தா, சஷிகாந்த தாஸ் மற்றும் வசந்த தாஸ் ஆகியோர் பா.ஜ., மாநில தலைவர் திலீப் சாகியா, மத்திய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் முன்னிலையில், பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.
இதுதவிர, காங்., முன்னாள் செயலர் பர்ஷா பாப் காலிதா, திரிணமுல் காங்., முன்னாள் பொதுச்செயலர் காங்கன் நாத் ஆகியோரும் பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது:
சட்டசபையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், எங்கள் அரசின் செயல்பாட்டிற்கு ஆதரவு அளித்தனர்.
வரும் சட்டசபை தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம்.
எனினும், எங்கள் கட்சியின் மத்திய குழுவின் முடிவே இறுதியானது. தற்போது எங்கள் கட்சியில் அனைவரும் எந்த நிபந்தனையும் இன்றி இணைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
