சட்டை அணியாமல் போராடிய 3 காங்கிரசார் சிம்லாவில் கைது
சட்டை அணியாமல் போராடிய 3 காங்கிரசார் சிம்லாவில் கைது
ADDED : பிப் 26, 2026 01:50 AM
புதுடில்லி: டில்லியில் நடந்த ஏ.ஐ., உச்சி மாநாட்டின் போது, மத்திய அரசை எதிர்த்து சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்ட, காங்., இளைஞர் அணியை சேர்ந்த மேலும் மூன்று தொண்டர்களை சிம்லாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி பாரத் மண்டபத்தில் பிப்., 16 - 21 வரை ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடந்தது.
உலக தலைவர்கள் பலர் பங்கேற்ற இந்த மாநாட்டின்போது காங்கிரசார் சிலர் சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை டில்லி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் டில்லி போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் ஹிமாச்சலின் சிம்லா சென்று, ஏ.ஐ., மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்த சவுரப், சித்தார்த், அர்பாஸ் ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதன் மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சிம்லாவில் கைதான மூவரையும் பாதுகாப்புடன் டில்லி கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தவும் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்தனர்.

