ADDED : பிப் 22, 2024 11:07 PM

புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனையில், ம.ஜ.த.,வுக்கு மாண்டியா, கோலார், ஹாசன் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மாநில கட்சியான ம.ஜ.த., சில மாதங்களுக்கு முன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தது.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து, கர்நாடகாவில் போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இதற்கிடையில், பா.ஜ., தலைவர்கள் அழைப்பின்படி, முன்னாள் முதல்வரும், ம.ஜ.த., மாநில தலைவருமான குமாரசாமி, இவரது மகன் நிகில் ஆகியோர் நேற்று முன்தினம் புதுடில்லி சென்றனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். மொத்தம் 20 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடந்தது.
அப்போது, கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில், சிக்கபல்லாப்பூர், கோலார், துமகூரு, ஹாசன், மாண்டியா, பெங்களூரு ரூரல் ஆகிய ஆறு தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி, ம.ஜ.த., தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், மாண்டியா, கோலார், ஹாசன் ஆகிய மூன்று தொகுதிகள் ம.ஜ.த.,வுக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மற்ற தொகுதிகள் குறித்து பின்னர் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
'மாண்டியா தொகுதிக்கு, அங்குள்ள பா.ஜ., தலைவர்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்' என்று குமாரசாமி விளக்கியுள்ளார்.
இதற்கு, 'அனைத்தையும் நாங்கள் சரி செய்து விடுகிறோம். வெற்றிக்காக உழையுங்கள்' என்று அமித் ஷா கூறியதாக தெரிய வந்துள்ளது
- நமது நிருபர் -.